Call: 9940634248
Call: 9940634248
சிறப்புகள்

சிலம்பொலி செல்லப்பனர் அவர்களின் சிறப்புகள்

1. தமிழகத்தின் மூத்த தமிழறிஞர், சிறந்த ஏழுத்தாளர், நல்ல ஆற்றலாளர், தமிழ் வல்லுனர்.

2 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர், பரப்பி வருபவர். சிலம்பொலி , சிலப்பதிகாரம்- தெளிவுரை , சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய அற்புதமான இலக்கிய நூல்களைத் தமிழன்னைக்குப் படைத்தவர்.

3. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி மிகப்பெரும் சாதனை படைத்தவர், சிலம்பொலியார் அணிந்துரைகள் (6 தொகுதிகள்) என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த அணிந்துரை இலக்கிய நூலாகத் தேர்வு செய்யப்பட்டுப் பரிசு பெற்றது. இவருடைய அணிந்துரைகள் செய்திக் கருவூலமாக, கருத்துக் களஞ்சியமாக, தமிழியல் வரலாற்று ஊற்றுக்கண்ணாக இன்றியமையாச் சிறப்பினவாக விளங்குகின்றன.

4. சிலப்பதிகாரம் , மணிமேகலை, பெருங்கதை, சிற்றிலக்கியங்கள் , சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி, இராவண காவியம், பாரதிதாசன் கவிதைகள், சீறாப் புராணம், இராஜநாயகம், தேம்பாவணி, பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகள் ஆகிய தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி யாரும் செய்யாத சாதனை படைத்தார்.

5. செம்மொழித் தமிழைப் பரப்புவதில் 60 ஆண்டு கால உழைப்பைக் கொட்டிய தமிழ்ப் பண்பாளர்.

6. சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு , கோவையில் நடைபெற்ற உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு ஆகிய மூன்று மாநாட்டுச் சிறப்பு மலர் தயாரிக்கும் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகப் பணியைச் செய்து முடித்தவர்.

7. மிக அதிக எண்ணிக்கையில் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி அரிய சாதனை படைத்தவர்.

8 . வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான இலக்கிய நூல்கள் பற்றிப் பல்லாண்டுகளாகப் பேருரை மற்றும் சிற்றுரை நிகழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றவர்.

9 . தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர்களில் ஒருவர். எந்தக் குறிப்பும் கையில் வைத்துக் கொள்ளாமல் , தமிழைக் கேட்போர் மயங்கும்வண்ணம் அருவியாய்க் கொட்டுபவர்.

10. தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று சிலப்பதிகாரத்தின் மாண்பினையும், செந்தமிழின் மேன்மையினையும் திறம்படப் பல மேடைகளில் முழங்கிவரும் - சீரிய செயல்பரியும் நண்பர் சிலம்பொலி செல்லப்பன் , இளங்கோவடிகளின் செந்தமிழ்க் காப்பியத்தில் மூழ்கித் திளைத்து , மூத்துக் குளித்து , நல்ல சிப்பிகைள மேலே கொணார்ந்து அரிய பல நன்முத்துகளைத் தேர்ந்து, திகட்டாத இனிய கருத்தோவியமாக சிலம்பொலி நூலைப் படைத்துள்ளார் என 1975 ஆம் ஆண்டிலேயே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்.

11. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர், தஞ்சைத் தமிழ்பல்கலை கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் போன்ற பணிகளில் பணியாற்றிய போது தமிழ் வளர்ச்சிக்கு வெகுவாகப் பாடுபட்டவர்.

12. செம்மொழி எண்பேராயக் குழுவில் சீர்மிகு உறுப்பினராய்ச் சிறப்பாகப் பணியாற்றியவர்.

13. சங்க இலக்கியங்களை நன்கு ஆய்ந்து திறம்பட எடுத்துக் கூறுவதில் பெரும் வல்லமை பெற்றவர்.

14. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஐக்கிய அரபு நாடுகள் , அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகளின் அழைப்பையேற்றுச் சென்று, திருக்குறள் , சிலப்பதிகாரம், மணிமேகலை , பத்துப்பாட்டு , எட்டுத்தொகை போன்ற செம்மொழி நூல்கள் பற்றித் தேன்மழை பொழிந்தது போன்ற அருமையான சொற்பொழிவுகளை நிகழ்த்திச் செம்மொழி ஆர்வத்தை வளர்க்கவும், பரப்பிடவும் வழி செய்தார். கடல்மடை திறந்தது போல் தடையின்றிப் பேசும் பேச்சாலும் , கேட்கக் கேட்கத் திகட்டாத தேன் சுவைக்கு ஒப்பான சொற்பொழிவுகளாலும் செம்மொழித் தமிழ் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தார்.

15. இருபதுக்கும் மேற்பட்ட அருமையான இலக்கிய நூல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அணிந்துரைகள், எண்ணற்ற இலக்கியக் கட்டுரைகள் , மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்கள் ஆகியன இலர் தமிழன்னைக்குச் சூட்டிய அழகு அணிகலன்களாகும்.

16. 84 வயதிலும் முழு நேரத் தமிழ்ப் பணியாற்றும் இவருக்குத் தமிழ்தான் சொத்து. தமிழுக்காக உழைப்பதைப் பெரும் பேறாக எண்ணிச் செயலாற்றி வரும் இவர் வள்ளுவர் காட்டும் வழி நின்று வாழ்ந்து வரும் மனித நேய மாண்பாளர்.

© 2017. All rights are reserved

Design by Microshare

Choose Your Color